Friday, 15 June 2012

சூனியம் என்பது ஓர் தந்திரமே !


சூனியம் என்பது ஓர் தந்திரமே ! 
______________________________________

மூஸா நபி காலத்தில், அவர்கள் அற்புதம் நிகழ்த்திக் காட்டும் போது சூனியக்காரர்களும் அற்புதம் நிகழ்த்திக் காட்டினார்கள்.

அது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "கயிறுகளைப் பாம்புகளாக மாற்றினார்கள்' என்று கூறாமல் "அவ்வாறு தோற்றமளித்தது' என்றும் "கண்களை வயப்படுத்தினார்கள்' என்றும் கூறுகிறான். 
(திருக்குர்ஆன் 7:116, 20:66)

"பாம்பு போல் தோற்றமளித்தது''
----------------------------------------------

"கண்களை வயப்படுத்தினார்கள்''
-----------------------------------------------

என்று மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டதிலிருந்து, சூனியக்காரர்கள் ஏதோ தந்திரம் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இப்படித் தந்திரம் செய்பவர்கள் தான் சூனியக்காரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகிறார்கள்.

சூனியம் என்பது ஒரு தந்திரக் கலை தானே தவிர அதன் மூலம் எதார்த்தமாக எதுவும் செய்ய இயலாது என்பதற்கு இங்கே இறைவன் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தை போதுமான சான்றாக இருக்கிறது.

Al Quran - 116. "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைக ளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.

இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ எந்த வித்தையும் கிடையாது.

தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துப் பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.
திருக்குர்ஆனின் 7:116 வசனத்தில் "சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

20:66 வசனத்தில் "பாம்பைப்போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான். "கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள்'' என்று அல்லாஹ் கூறவில்லை.

20:69 வசனத்தில் "சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி, தந்திரம்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லா ததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. 

மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.

இதிலிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.

சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?
-----------------------------------------------------------

மூசா (அலை) அவர்கள் செய்து காட்டிய அற்புதத்தைப் பார்த்தவுடன் போட்டியிட வந்த சூனியக்காரர்கள் மூசா (அலை) அவர்களை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். சஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள்.

சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடம் இருந்திருந்தால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்க மாட்டார்கள். மூசா நம்மை விட பெரிய சூனியக்காரர் என்று கூறி மறுத்திருப்பார்கள்.

மூசா நம்மைப் போன்று ஒரு சூனியக்காரர் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் மூசா நபியை போட்டிக்கு அழைத்தார்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சூனியக்காரன் யார்? என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

மூசா நபி செய்தது தாங்கள் செய்தது போன்று வித்தை அல்லாமல் தெளிவான அற்புதமாக இருந்ததாலும் இதை இறைத்தூதரைத் தவிர சூனியக்காரர்களாலும் செய்ய முடியாது என்று நம்பியதாலும் இஸ்லாத்திற்கு வந்தார்கள்

No comments:

Post a Comment