அஸ்ஸலாமு அலைக்கும்:
குறிப்பு :அடக்கத்தலங்களில் பூட்ஸ் (BOOTS) போன்றவைகளை அணியக் கூடாது என்று தடை இருக்கிறது.
பதில்:
இது குறித்து இருவிதமான கருத்துக்கள் கொண்ட ஹதீஸ்கள் உள்ளதால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
1338حَدَّثَنَا عَيَّاشٌ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (1338)
அடக்கம் செய்து விட்டு திரும்பும் மக்களின் செருப்போசையை இறந்தவர் கேட்பார் என்பதில் இருந்து மண்ணறைகளுக்கு செருப்பணிந்து செல்ல்லாம் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு மாற்றமான கருத்தைத் தருகிறது.
2021 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الْأَسْوَدِ بْنِ شَيْبَانَ وَكَانَ ثِقَةً عَنْ خَالِدِ بْنِ سُمَيْرٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ أَنَّ بَشِيرَ ابْنَ الْخَصَاصِيَةِ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَّ عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ فَقَالَ لَقَدْ سَبَقَ هَؤُلَاءِ شَرًّا كَثِيرًا ثُمَّ مَرَّ عَلَى قُبُورِ الْمُشْرِكِينَ فَقَالَ لَقَدْ سَبَقَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ فَرَأَى رَجُلًا يَمْشِي بَيْنَ الْقُبُورِ فِي نَعْلَيْهِ فَقَالَ يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَلْقِهِمَا رواه النسائي
பஷீர் பின் கஸாஸிய்யா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அவர்கள் முஸ்லிம்களின் மண்ணறைகளுக்கு அருகில் வந்த போது இவர்கள் (உலகில் வாழும் போது) அதிகமான தீங்குகளை (சந்தித்து இப்போது நல்வாழ்வின் பால்) முந்திச் சென்று விட்டனர் என்று கூறினார்கள். பிறகு இணைவைப்பாளர்களின் மண்ணறைகளுக்கு அருகில் அவர்கள் வந்தபோது இவர்கள் (உலகில் வாழும் போது) அதிகமான நன்மைகளை (அடைந்து தற்போது தீய வாழ்வின் பால்) முந்திச் சென்று விட்டனர் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரைப் பார்க்க நேரிட்டது. அவர் செருப்பு அணிந்து கப்றுகளுக்கிடையே நடந்து சென்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செருப்பு அணிந்திருப்பவரே அதை(க் கழற்றி கீழே) போடுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ (2021)
இந்த ஹதீஸைப் பார்க்கும் போது மண்ணறைகளுக்குச் செருப்பணிந்து செல்லக் கூடாது என்று தெரிகிறது.
அல்லாஹ்வின் கூற்றிலும் அவனது தூதரின் கூற்றிலும் நிச்சயம் முரண்பாடு இருக்க முடியாது. முரண்பாடு போல் தோன்றினாலும் அதை கவனமாக சிந்தித்தால் முரண்பாடு இல்லாமல் விளங்கும் வகையில் அவை அமைந்திருக்கும்.
பொதுவாக இது போல் முரண்பாடு காணப்பட்டால் அதை பல வழிகளில் தீர்வு காணலாம். ஒரு காரியம் முன்னர் தடுக்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டிருந்தால் இரண்டு செய்தியையும் பார்க்கும் போது முரண்பாடாகத் தோன்றும். ஆனால் இது ஆரம்பத்தில் சொன்னது. இது பின்னர் சொன்னது என்ற விபரம் தெரியவந்தால் முன்னர் சொன்னது மாற்றப்பட்டு விட்டது என்றும் பின்னர் சொன்னது நடைமுறையில் உள்ளது என்றும் புரிந்து கொள்ளலாம். இப்போது முரண்பாடு நீங்கி விடும்.
மேற்கண்ட இரண்டு செய்திகளில் எது முதலாவது எது இறுதியானது என்ற தகவல் இல்லாததால் அந்த வகையில் இதற்குத் தீர்வு காண முடியாது.
இரண்டு அறிவிப்புகளில் ஒன்று பலவீனமாகவும் மற்றொன்று பலமாகவும் இருந்தால் பலமானதை நாம் எடுத்துக் கொள்ளலாம். இங்கே இரண்டு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவையாக உள்ளன.
இது போன்ற சூழ்நிலையில் இரண்டு ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வாசக அமைப்பை வைத்து இரண்டையும் இணைத்து ஒரு முடிவுக்கு வரமுடியுமா என்று பார்த்து இரண்டுக்கும் இணக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
இந்த ஹதீஸ்களில் அவ்வாறு இரண்டையும் இணைத்து முடிவுக்கு வருவதற்கு ஏற்ற வகையில் வாசக அமைப்பு அமைந்துள்ளது.
அது எப்படி என்று பார்ப்போம்:
செருப்பு என்பதற்கு அரபு மொழியில் நஃல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து வகையான செருப்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
செருப்பின் மூலப்பொருளை வைத்து தோல் செருப்பு, ரப்பர் செருப்பு எனப்பல வகைகள் உள்ளன. செருப்பின் தரத்தை வைத்து உயர்தரம் நடுத்தரம் எனப் பலவகைகள் உள்ளன. செருப்பின் அமைப்பை வைத்து பூட்ஸ், ஷூ, கட்ஷூ, ஹவாய், ஹீல்ஸ் எனப்பல வகைகள் உள்ளன. நஃல் என்ற சொல் மேற்கண்ட அனைத்தையும் குறிக்கும் சொல்லாகும்.
நமது காலத்தில் ஷூ எனப்படும் காலணி சாதாரண மக்கள் பயனபடுத்துவதில்லை. அது சொகுசான வாழ்க்கைக்கு அடையாளமாக உள்ளதை நாம் அறிவோம். மேலும் இதை வசதியானவர்கள் கூட எல்லா நேரத்திலும் பயன்படுத்துவதில்லை. கண்ணியமாக காட்சிதர வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டுமே ஷூவைப் பயன்படுத்துகின்றனர்.
இது போன்ற தரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சப்திய்யா எனப்படும் ஒரு வகை தோல் செருப்பு பயன்பாட்டில் இருந்தது. சொகுசான வாழ்க்கையை விரும்பக்கூடியவர்கள் பெரும்பாலும் அதைப் பயன்படுத்தி வந்தனர். புகாரியில் இடம்பெறும் 166 வது ஹதீஸில் இருந்து அதை அறியலாம்.
166 உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், அபூஅப்திர் ரஹ்மானே! நீங்கள் நான்குகாரியங்களைச் செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள் நண்பர்க(ளான நபித்தோழர்க)ளில் வேறெவரும்அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)அவர்கள், இப்னு ஜுரைஜே, அவை எவை? என்று கேட்டார்கள். நான், (தவாஃபின் போது கஅபாவின்மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ருக்னுல் இராக்கீ ஆகிய இரு மூலைகளை மட்டுமே நீங்கள்தொடுவதைக் கண்டேன். (மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை.) மேலும் முடி களையப்பட்டதோல் செருப்பையே நீங்கள் அணிவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் நிறச்சாயம் பூசுவதையே நான் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருக்கும் போது மக்கள் (துல்ஹஜ்)பிறை கண்டவுடன் இஹ்ராம் கட்டுவதைப் போன்று இஹ்ராம் கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள்(யவ்முத் தர்வியா) வரை இருப்பதைக் கண்டேன் (இவைதாம் அந்த நான்கு காரியங்கள்) என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ,ருக்னுல் இராக்கீ ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை நான் காணவில்லை(ஆகவே, நானும் அப்படிச் செய்கிறேன்). முடி களையப்பட்ட செருப்புகளைப் பொறுத்த வரைஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத செருப்புகளை அணிவதையும் அதனுடன் (காலைக்கழுவி) உளூ செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதைவிரும்புகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்ஆடையில்) அதன் மூலம்தான் சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அதைக் கொண்டுசாயமிடுவதை நான் விரும்புகிறேன். இஹ்ராம் கட்டுவதைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் (துல்ஹஜ் எட்டாம் நாள்) வரைஇஹ்ராம் கட்டுவதை நான் பார்த்ததில்லை (எனவேதான் நானும் எட்டாம் நாள் இஹ்ராம் கட்டுகிறேன்).
புகாரி 166
முடி களையப்பட்ட தோல் செருப்பு என்று தமிழாக்கம் செய்த இடத்தில் சப்திய்யா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடம் செய்யப்பட்ட தோலில் இன்று முடிகள் இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அன்றைக்கு அந்த தொழில் நுட்பம் பரவலாக இல்லாததால் முடிநீக்கப்படும் வகையில் பாடம் செய்யப்பட்ட தோல் செருப்பு வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் சொகுசான செருப்பாக இருநதுள்ளது. நபிதோழர்களிடம் இது வழக்கத்தில் இல்லாததால் தான் இப்னு உமர் அவர்கள் அவ்வாறு அணியும் போது அவர்களிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வகை செருப்பை பயன்படுத்தியுள்ளார்கள் எனக் காரணம் கூறுகிறார்கள்.
قَالَ أَبُو عُبَيْد . كَانُوا فِي الْجَاهِلِيَّة لَا يَلْبَس النِّعَال الْمَدْبُوغَة إِلَّا أَهْل السَّعَة , وَاسْتَشْهَدَ لِذَلِكَ بِشِعْرٍ.
அரபு மொழி வல்லுனரான அபூ உபைத் அவர்கள் பொருளாதார வசதி படைத்தவர்கள் மட்டுமேசப்திய்யா வகை செருப்பை பயன்படுத்தி வந்தனர் எனக் கூறி அத்ற்கு ஆதாரமாக பண்டையஇலக்கியத்தில் இருந்து ஒரு கவிதையை எடுத்துக் காட்டுகிறார் என்று இப்னு ஹஜர் அவர்கள் பத்ஹுல்பாரியில் எடுத்துக் காட்டுகிறார்கள்.
இதே கருத்தை காளீ அவர்களும் கூறியதாக நவவி அவர்களும் தமது ஷரஹ் முஸ்லிமில் எடுத்துக் காட்டுகிறார்கள்.
قَالَ الْقَاضِي : وَهَذَا ظَاهِر كَلَام اِبْن عُمَر فِي قَوْله : ( النِّعَال الَّتِي لَيْسَ فِيهَا شَعْر ) , وَقَالَ : هَذَا لَا يُخَالِف مَا سَبَقَ , فَقَدْ تَكُون سُودًا مَدْبُوغَة بِالْقَرَظِ لَا شَعْر فِيهَا ; لِأَنَّ بَعْض الْمَدْبُوغَات يَبْقَى شَعْرهَا , وَبَعْضهَا لَا يَبْقَى . قَالَ : وَكَانَتْ عَادَة الْعَرَب لِبَاس النِّعَال بِشَعْرِهَا غَيْر مَدْبُوغَة , وَكَانَتْ الْمَدْبُوغَة تُعْمَل بِالطَّائِفِ وَغَيْره , وَإِنَّمَا كَانَ يَلْبَسهَا أَهْل الرَّفَاهِيَة , كَمَا قَالَ شَاعِرهمْ : تَحْذِي نِعَال السِّبْت لَيْسَ بِتَوْأَمٍ
மேலும் ஐனீ அவர்கள் அபூதாவூத் நூலின் விளக்க உரையில்
شرح أبي داود للعيني (9/ 79)
ومنه حديث ابن عمر: "قيل له: إنك تلبس النعال السبتية، إنما اعترض عليه لأنها نعال أهل النعمة والسعة،
சப்திய்யா செருப்பு வசதியும் சொகுசும் உள்ளவர்களின் செருப்பாக இருந்த்தால் தான் இப்னு உமரிடம் மக்கள் எதிர்க் கேள்வி கேட்டனர் என்று குறிப்பிடுகிறார்.
இந்த விபரங்களை மனதில் வைத்துக் கொண்டு மண்ணறையில் செருப்பு அணியக் கூடாது என்று தடை செய்த ஹதீஸுக்கு வருவோம்.
மேற்கண்ட ஹதீஸில் يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَلْقِهِمَا என்ற வாசகத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். செருப்பு அணிந்து சென்ற அந்த மனிதரை நோக்கி செருப்பணிந்தவரே செருப்பைக் கழற்றும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறாமல் இரண்டு சப்திய்யா அணிந்திருப்பவரே அவற்றைக் கழற்றும் என்று கூறுகிறார்கள். அவர் அணிந்துள்ள செருப்பின் தனிப்பட்ட வகையைச் சொல்லிக் காட்டி அதைக் கழற்ற சொல்லி இருப்பதால் மண்ணறைகளில் ஆடம்பரத்தின் அடையாளமாக உள்ள பூட்ஸ் போன்றவைகளை அணியக் கூடாது என்ற கருத்து தான் கிடைக்கும். பொதுவாக செருப்பு அணிய அனுமதிக்கும் ஹதீஸ் இருப்பதால் அதற்கு முரணில்லாமல் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வித்தியாசப்படுத்த தகுந்த காரணம் உள்ளது.
இப்படி முடிவு எடுக்கும் போது இரு ஹதீஸ்களையும் நாம் செயல்படுத்த முடியும்.
பள்ளிவாசல்கள் வணக்கம் நிறைவேற்றப்பட வேண்டிய இடமாக இருந்தும் செருப்பணிந்து தொழுவதை மார்க்கம் அனுமதித்துள்ளது எனபதையும் நாம் கவனத்தில் கொண்டால் இந்த விளக்கம் தான் சரியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மண்ணறைகளில் கற்கள், முட்கள், மனித எலும்புகள், விஷ ஜந்துக்கள் ஆகியவை நிறைந்திருக்கும். இங்கே செருப்பணிந்து வந்தால் தான் இவற்றின் தீங்கிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
மேலும் இந்த சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களுடன் பஷீர் (ரலி) அவர்கள் நடந்து செல்கிறார்கள். இருவரும் செருப்பணிந்து தான் புறப்பட்டிருப்பார்கள். மையவாடி வந்தவுடன் செருப்பை கழற்ற வேண்டுமென்றால் இவ்விருவரும் செருப்பைக் கழற்றியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் செருப்பைக் கழற்றியதாகவோ தன்னையும் செருப்பை கழற்றச் சொன்னதாகவோ பஷீர் (ரலி) அவர்கள் கூறவில்லை.
இது போன்று நடந்திருந்தால் அதை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய இடம் இது தான். ஆனால் நபித்தோழர் பஷீர் (ரலி) அவர்கள் அவ்வாறு எதையும் கூறவில்லை. எனவே மையவாடிக்குள் சாதாரண செருப்பணிவது தவறல்ல என்பதை இதன் மூலமும் அறிய முடிகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! -அல்-குர்ஆன் (3 :102)
-----------------------------------------------------------------------------------
Shagar.M
No comments:
Post a Comment