Saturday, 21 July 2012

நட்பும் அதன் ஒழுக்கமும்.



நட்பும் அதன் ஒழுக்கமும்.

பல நூறு நபர்களை சந்தித்துத்தாலும் சிலருடன்தான் நமக்கு அதிக நெருக்கமும் நட்பும் ஏற்படுகிறது.. காரணம்,இது அல்லாஹ்வே ஏற்படுத்தியுள்ள நியதி. 
அறிமுகமாகிக் கொள்ளவேண்டும் ஆத்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 3088) 
நட்பை வளர்த்தல் 
(1) ஸலாம் கூறுதல் 
என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்! 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 81)

உறவினர்களாக இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறவேண்டும்.

 (2) அன்பைத் தெரிவித்தல்
நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.  அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல் : அஹ்மது 11980 
(3) சந்தித்தல்
ஒரு மனிதர் இன்னொரு ஊரிலிருந்த தன் சகோதரரை சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் வழியில் அல்லாஹுதஆலா ஒரு மலக்கை எதிர்பார்த்திருக்கும்படிச் செய்தான். அம்மனிதர் அந்த மலக்கு அருகில் வந்த போது, அம்மலக்கு அவரிடம் எங்கு செல்கிறீர்? என்று கேட்டார். அதற்கவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரை நாடிச் செல்கிறேன் என்றார். அப்போது அந்த மலக்கு அந்தச் சகோதரர் உமக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டியதிருக்கிறதா? (அதற்காக அவரிடம் செய்கிறாயா?) என்று கேட்டார். அதற்கு அம்மனிதர்,அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார். அப்போது அந்த மலக்கு, அல்லாஹ்வுக்காக நீர் அவரை நேசித்தது போல் அல்லாஹ் உன்னை நேசிக்கிறான் என்பதை உனக்கு தெரிவிக்க வந்த அல்லாஹ்வின் தூதர்தான் நான் என்று கூறினார். 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 4656)

இந்த ஹதீஸில் கிடைக்கும் செய்திகள்:
1) நல்ல நட்பு என்பது உலக லாபத்திற்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக என இருப்பது.
2) நட்புக் கொண்டவர்களிடையே சந்திப்புகள் நடக்க வேண்டும்
3) ஒருவர் மீது தூய்மையான அன்பு கொண்டால் அதற்காக அல்லாஹ்வும் நம்மீது அன்பு கொள்கிறான். 
 நட்பின் கடமைகள்
(1) உதவி செய்தல் 
உலக இலாபத்திற்காக நட்புக் கொள்வது முறையல்ல என்றாலும் தேவைகள் நெருக்கடிகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் உதவிகள், ஒத்துழைப்புகள் செய்து கொள்ள வேண்டும். 
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262, முஸ்லிம்)

பொதுவாக அனைத்து முஸ்லிம்களிடமும் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனும் போது நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் இந்த கடமைகளின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது.

(2) நல்வழிப்படுத்துதல்
இந்த வசனத்தில் முஃமின்கள் தங்களுக்குள் நன்மையை எடுத்துச் சொல்லி தீமையை தடுக்க வேண்டியது கடமை என குறிப்பிடப்படுகிறது. 


18:32 தொடர் வசனங்களில் உலக வாழ்வில் மயங்கி அல்லாஹ்வை மறந்த தன் நண்பனுக்கு ஒரு நல்ல நண்பன் செய்த உபதேசத்தை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான்.

உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும் அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள் என்றார். அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும் அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 6438)

அநியாயம் செய்வது தன் நண்பன் என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருப்பது நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல. மேலும் தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால் அது ஒருபெரிய பாவமாகிவிடும்.

உற்ற நேசர்களெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாயிருப்பர் இறையச்சமுள்ளவர்களைத் தவிர (43:67)

 நண்பர்களின் தீமைக்கு துணைபோனவர்கள் எல்லாம் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று ஒருவரை ஒருவர் பழித்து எதிரிகளாகிவிடுவர்.

தீய நட்பை முறிக்க வேண்டும்
திருத்தினாலும் திருந்தாத தீய நண்பனிடமிருந்து விலகிக் கொள்ளவேண்டும். 

ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4193, திர்மிதி 2300)

 தூய நட்புக்கான கூலி
அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்காக நேசிக்கக் கூடியவர்களுக்கு ஒளியினால் ஆன மின்பர்கள் (மேடைகள்) இருக்கும். அவர்கள் நிலையை நபிமார்களும் ஷுஹதாக்களும் கூட விரும்புவார்கள். 
(அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், நூல்: திர்மிதி 2312)

நல்லோரை நேசிப்போம்!
நமக்கு முன் சென்ற நல்லோர்களையும் நமது சமகால நல்லோர்களையும் நமக்கு பின் தோன்றும் நல்லோர்களையும் நேசிக்குமாறும் அவர்களுக்காக துஆச் செய்யுமாறும் பாவமன்னிப்புத் தேடுமாறும் மார்க்கம் அறிவுறுத்துகிறது. மேலும் இம்முக்காலத்து நல்லோர்களுடன் சொர்க்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசையைப்படவும் அதற்காக செயல்படவும் மார்க்கம் வலியுறுத்துகிறது. 
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 5703)

அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார்,ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை, இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்து நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4462)

No comments:

Post a Comment